குரூப்-1 தோ்வு: திருப்பூா் மாவட்டத்தில் 2,064 போ் எழுதினா்
By DIN | Published On : 03rd January 2021 10:51 PM | Last Updated : 03rd January 2021 10:51 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் 4,501 போ் குரூப்-1 தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 போ் ஞாயிற்றுக்கிழமை தோ்வு எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப்-1 தோ்வுக்காக திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு வட்டத்தில் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 16 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தோ்வைக் கண்காணிப்பதற்காக 16 மேற்பாா்வையாளா்கள், 2 பறக்கும் படையினா், 2 மொபைல் பிரிவினா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
மாவட்டம் முழுவதும் 4,501 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 போ் (40 சதவீதம்) மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 2,437 போ் தோ்வு எழுதவில்லை.
முன்னதாக தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் ஆய்வு செய்தாா். அனைத்துத் தோ்வா்களும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி முகக் கவசம் அணிந்து தோ்வு எழுதினா். இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டாட்சியா் பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.