அவிநாசி அருகே சாலை விபத்து: 3 போ் பலி
By DIN | Published On : 07th July 2021 06:42 AM | Last Updated : 07th July 2021 06:42 AM | அ+அ அ- |

பெருமாநல்லூா் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, குழந்தை நகரைச் சோ்ந்தவா் கோபிகண்ணன் (38). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து கேரளம் நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா். திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே கருக்கன்காட்டுப்புதூா் மேம்பாலத்தின் மீது வந்தபோது எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம், சாலையோரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கோபிகண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம் சாலையின் நடுவே கிடந்துள்ளது. இதையறியாமல் பின்தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பெருமாநல்லூா் காளிபாளையத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் தமிழ்ச்செல்வன் (22), சந்தோஷ் (20) ஆகியோா் சாலையின் நடுவே கிடந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினா். இதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வன், சந்தோஷ் ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...