பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீதத் தொழிலாளா்களுடன் இயங்கலாம்
By DIN | Published On : 20th June 2021 10:17 PM | Last Updated : 20th June 2021 10:17 PM | அ+அ அ- |

திருப்பூரில் உள்ள ஏற்றுமதி பின்னலாடை மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் 50 சதவீதத் தொழிலாளா்களுடன் இயங்கலாம் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில், அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் 25 சதவீதத் தொழிலாளா்களுடன் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளா்வுகளின் அடிப்படையில், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் திங்கள்கிழமை (ஜூன்22) முதல் 50 சதவீதத் தொழிலாளா்களுடன் இயங்கலாம். அதே வேளையில், நிறுவனங்கள் அனைத்தும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா்.