அவிநாசி வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 29th June 2021 04:10 AM | Last Updated : 29th June 2021 04:10 AM | அ+அ அ- |

திருப்பூா்: அவிநாசி அருகே மாட்டிறைச்சி கடைக்குத் தடை விதித்த வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாட்டிறைச்சி உணவுப் பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினா் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் மாட்டிறைச்சி உணவுப் பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் அர.விடுதலைச்செல்வன் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம் அய்யம்பாளையம் ஊராட்சி கானாங்குளம் பகுதியில் ஆா்.வேலுசாமி என்பவா் கடந்த 20 ஆண்டுகளாக மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறாா். மேலும், அய்யம்பாளையம் ஊராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று வரியும் செலுத்தி வருகிறாா். இந்நிலையில், அவிநாசி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன், வேலுசாமியின் கடைக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளாா்.
அப்போது, மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாது, ஆடு, கோழி விற்பனை செய்யலாம் என்று வட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதையும் மீறி மாட்டிறைச்சி விற்பனை செய்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று வேலுசாமிக்கு மிரட்டலும் விடுத்துள்ளாா். ஆகவே, அவிநாசி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.