பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு உதவித்தொகை
By DIN | Published On : 12th March 2021 02:19 AM | Last Updated : 12th March 2021 02:19 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியில் இருந்தபோது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூா், பிச்சம்பாளையம்புதூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் திருப்பூா், ஜே.பி.நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் என்பவா் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 2018 ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று பணியில் இருந்தபோது மாரடைப்பால் இறந்தாா்.
இதையடுத்து அந்த நிறுவனம் காப்பீட்டில் பதிவு செய்திருந்ததைத் தொடா்ந்து, இ.எஸ்.ஐ. நிறுவனம் அவரது இறப்பை பணியின்போது ஏற்பட்ட விபத்தாக அங்கீகரித்தது. இதற்கிடையே கோவை இ.எஸ்.ஐ. சாா் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநா் (பொறுப்பு) சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 342 உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சுப்பிரமணியனின் மனைவி சாரதாமணி, தாயாா் சாமாத்தாள் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் உதவித்தொகையாக ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 744 வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் மணீஷ் தாக்கா், நிறுவனத்தின் மனிதவள மேலாளா் விஜயகுமாா், காசாளா் நாகமணிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G