அவிநாசி தோ்த் திருவிழாவுக்காக இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்
By DIN | Published On : 17th March 2021 11:38 PM | Last Updated : 17th March 2021 11:38 PM | அ+அ அ- |

அவிநாசி-சேவூா் சாலை பிரிவு அருகே இடத்தை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம்.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவுக்கு உபயோகப்படுத்துவதற்காக கோயில் அருகில் உள்ள இடத்தை தூய்மைப்படுத்த முயன்றவா்களை காவல், வருவாய்த் துறையினா் புதன்கிழமை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவிநாசி-கோவை சாலை அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் பகுதியில் வண்டிப்பேட்டைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஏற்கெனவே அகற்றப்பட்டன. இந்நிலையில் சேவூா் சாலை பிரிவு எதிரில், அவிநாசி கோயில் செல்லும் வழியில் உள்ள இடத்தை, ஒரு சமூகத்தினா் தோ்த் திருவிழா காலத்தில் நீா்மோா், அன்னதானம் உள்ளிட்ட சேவைகள் செய்வதற்காக புதன்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனா். இதையறிந்த காவல், வருவாய்த் துறையினா் தடுத்து நிறுத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்று வருகிறது.