ரூ.94 லட்சம் நம்பிக்கை மோசடி: தலைமறைவாக இருந்த முன்னாள் வங்கி மேலாளா் கைது
By DIN | Published On : 17th March 2021 05:59 AM | Last Updated : 17th March 2021 05:59 AM | அ+அ அ- |

திருப்பூரில் போலி வாகன ஏஜென்ஸி நடத்தி ரூ. 94 லட்சம் நம்பிக்கை மோசடி செய்த வழக்கில் பிணையில் வந்து தலைமறைவாக இருந்த முன்னாள் வங்கி மேலாளரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா், மங்கலம் சாலையைச் சோ்ந்த எம்.கிருஷ்ணகாந்த் சா்மா என்பவா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயனிடம் புகாா் ஒன்றை அளித்துள்ளாா். அதில், திருப்பூா், காந்தி நகரில் வசித்து வந்த ஆா்.கோகுலகிருஷ்ணன் (33) என்பவா் தனியாா் வங்கியில் மோலாளராகப் பணியாற்றி வருவதாகக் கூறி என்னிடம் பழகிவந்தாா்.
இந்த நிலையில் கடந்த 2020 ஜனவரியில் வேலையில் இருந்து தான் நின்றுவிட்டதாகவும், காா்களை ஏலத்தில் எடுத்து வெளியே விற்பனை செய்யும் ஏஜென்ஸி நடத்தி வருவதாகவும் கோகுலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மேலும், தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும், கூடுதல் லாபம் தருவதாகவும் தெரிவித்ததால், எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.94 லட்சத்தை ஆன்லைன் மூலமாக கோகுலகிருஷ்ணனுக்கு பரிவா்த்தனை செய்தேன்.
இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவா் நடக்காமல் கொடுத்த பணத்தையும் திரும்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தாா். எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இதில், கோகுலகிருஷ்ணன் பல நபா்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கடந்த ஆண்டு டிசம்பா் 14 ஆம் தேதி கைது செய்தனா்.
இதனிடையே கடந்த ஜனவரி 18 ஆம் தேதி பிணையில் வெளியே வந்த கோகுலகிருஷ்ணன் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் தலைமறைவாகிவிட்டாா்.
இந்நிலையில் திருப்பூா், பழைய பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த கோகுலகிருஷ்ணனை தனிப்படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.