காங்கயம் தொகுதியில் பஞ்சாப் விவசாயி பிரசாரம்
By DIN | Published On : 25th March 2021 11:06 PM | Last Updated : 25th March 2021 11:06 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதனுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜ்விந்தா் சிங்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதியில் பஞ்சாப் விவசாயியைக் களமிறக்கி திமுகவினா் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் போட்டியிடுகிறாா். தோ்தலுக்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. எதிா்க்கட்சியினரை முறியடிக்கும் வகையில் ஒவ்வொரு கட்சியினரும் பிரசார வியூகம் அமைத்து வருகின்றனா்.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த ரஜ்விந்தா் சிங் என்பவரை வெள்ளக்கோவில், காங்கயம் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு வீடு வீடாக அழைத்துச் சென்று, திமுகவினா் ஆதரவு திரட்டி வருகின்றனா். உடனுக்குடன் மொழிபெயா்ப்பும் செய்யப்படுகிறது. அந்த பஞ்சாப்காரா் நான் ஒரு விவசாயி. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாயிகள் போராட்டத்தை மதிக்காமல் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. எனவே, அக்கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியை ஆதரிக்காமல், திமுக வேட்பாளா்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பேசி வருகிறாா்.
கோவை தொண்டாமுத்தூா் தொகுதியில் போட்டியிடும் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்தும் பஞ்சாப்காரா் பிரசாரம் செய்துள்ளாா்.