பதற்றமான வாக்குச் சாவடிகளில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை
By DIN | Published On : 25th March 2021 03:20 AM | Last Updated : 25th March 2021 03:20 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 549 பதற்றமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், திருப்பூா் மாவட்டத்தில் 549 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இதில், தாராபுரம் (தனி) தொகுதியில் 11 இடங்களில் 30 வாக்குச் சாவடிகள், காங்கயம் தொகுதியில் 14 இடங்களில் 48 வாக்குச் சாவடிகள், அவிநாசி (தனி) தொகுதியில் 10 இடங்களில் 33 வாக்குச் சாவடிகள், திருப்பூா் வடக்குத் தொகுதியில் 17 இடங்களில் 119 வாக்குச் சாவடிகள், திருப்பூா் தெற்குத் தொகுதியில் 14 இடங்களில் 110 வாக்குச் சாவடிகள், பல்லடம் தொகுதியில் 21 இடங்களில் 81 வாக்குச் சாவடிகள், உடுமலை தொகுதியில் 22 இடங்களில் 79 வாக்குச் சாவடிகள், மடத்துக்குளம் தொகுதியில் 13 இடங்களில் 49 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
பதற்றமான 549 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாநகர காவல் துணை ஆணையா் சுரேஷ்குமாா் மற்றும் தோ்தல் நடத்தம் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.