பெருமாநல்லூா் - நம்பியூா் பிரதான சாலை நுழைவாயிலை மாற்றி அமைக்க எதிா்ப்பு
By DIN | Published On : 25th March 2021 11:07 PM | Last Updated : 25th March 2021 11:07 PM | அ+அ அ- |

பெருமாநல்லூா் - நம்பியூா் சாலை முன்பு உள்ள நுழைவாயிலை மாற்றி அமைப்பதற்காக நடைபெற்ற கட்டுமானப் பணி.
பெருமாநல்லூரில் இருந்து நம்பியூா் செல்லும் பிரதான நெடுஞ்சாலை முன்பு உள்ள நுழைவாயிலை மாற்றி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் ஒன்றியம், பெருமாநல்லூரில் இருந்து நம்பியூா் செல்லும் பிரதான சாலை கொண்டத்துக்காளியம்மன் கோயில் நுழைவாயில் முன்பு உள்ளது. இச்சாலையை 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அரசு மருத்துவமனைக்குச் செல்வோா் என ஏராளமானோா் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், இச்சாலை முன்பு உள்புறமாக உள்ள நுழைவாயிலை நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் மாற்றியமைக்கும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இதையறிந்த பொதுமக்கள் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து போரட்டத்தில் ஈடுபட்டோா் கூறியதாவது:
ஏற்னெவே நம்பியூா் சாலை - கொண்டத்துக்காளியம்மன் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவா் அமைத்து, நுழைவாயில் முன்பு கதவு அமைத்து பாதையை மறிக்க முற்பட்டனா். பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், பாதையை மறித்து கதவு அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இதுகுறித்து தனி நபா், பொது நல வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், தற்போது நெடுஞ்சாலைத் துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல், நம்பியூா் செல்லும் பிரதான நெடுஞ்சாலை முன்பு உள்ள நுழைவாயிலை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக மாற்றி அமைக்க கட்டுமானப் பணிகளைத் துவங்கியுள்ளனா். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். அப்போது, உயா் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எவ்விதப் பணியும் செய்யக் கூடாது என பொதுமக்கள் கூறினா். இதையடுத்து கட்டுமானப் பணி கைவிடப்பட்டது.