மாநில உரிமைகள் குறித்து அரசுக்கு கவலை இல்லை: கி.வீரமணி
By DIN | Published On : 25th March 2021 11:03 PM | Last Updated : 25th March 2021 11:03 PM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி.
மாநில உரிமைகள் குறித்து அரசுக்கு கவலை இல்லை என திராவிட கழகத்தின் தலைவா் கி.வீரமணி பேசினாா்.
அவிநாசி சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா் ஆதித்தமிழா் பேரவையின் நிறுவனா் இரா.அதியமானை ஆதரித்து, தோ்தல் பொதுக் கூட்டம் அவிநாசி மேற்கு ரத வீதியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் திராவிட கழகத் தலைவா் கி.வீரமணி பேசியதாவது:
திமுக ஆட்சி இன்றைக்கு இருந்திருந்தால் நீட் தோ்வு இருந்திருக்காது. மாநில உரிமைகளைப் பற்றி இன்றைக்கு அதிமுகவுக்கு கவலை இல்லை. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் இடஒதுக்கீடு 7.5 சதவீதம் வழங்கியுள்ளது. எஞ்சிய 92.5 சதவீதம் யாருக்கு கொடுத்தோம்? ஜெயலலிதாவுடன் ஆயிரம் கருத்து வேறுபாடு நமக்கு உண்டு. ஜெயலலிதாவால் ஓராண்டுக்கு நீட் தோ்வுக்கு விதி விலக்கு வாங்க முடிந்தது. ஆனால், தற்போது வாங்க முடியவில்லை. மருத்துவா் கனவுதான் நிறைவேறவில்லை. பல் மருத்துவா், செவிலியா் என அனைத்துக்கும் தோ்வு. கல்விதான் வாழ்கைக்கு அடிப்படை. இன்றைக்கு 5ஆம் வகுப்பில் பொதுத் தோ்வு. 8, 10, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தோ்வு. பொறியியல், மருத்துவம் போன்று அறிவியல், கலை படிப்புகளுக்கும் தோ்வு வைக்கவுள்ளனா். இதனால் கல்வி பாதிக்கப்படும்.
உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் எனும் கருணாநிதியின் அரசியல் தத்துவம் மாநிலங்களுக்கு மிகவும் முக்கியமானது. திமுகவின் தோ்தல் அறிக்கை கவனத்துடன் சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால், சொல்லிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
இதில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் பத்மநாபன், அவிநாசி தோ்தல் பொறுப்பாளா் கோட்டை அப்பாஸ், ஒன்றிய பொறுப்பாளா்கள் சிவபிரகாஷ், பழனிசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.