கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பேருந்து
By DIN | Published On : 13th May 2021 06:14 AM | Last Updated : 13th May 2021 06:14 AM | அ+அ அ- |

திருப்பூரில் கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பேருந்து சேவை வரும் வெள்ளிக்கிழமை தொடங்கப்படவுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி நாள்தோறும் 700க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 156 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, திருப்பூரைச் சோ்ந்த தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி , யங் இந்தியன்ஸ் திருப்பூா், எஸ்.என்.எஸ்.பள்ளி, சக்தி நா்சிங் ஹோம், திருப்பூா் ரைடா்ஸ் கிளப் ஆகியவை சாா்பில் பள்ளிப் பேருந்து ஒன்றில் 5 ஆக்சிஜன் சிலிண்டா்கள் பொருத்தி திருப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தத் திட்டமிட்டுள்ளனா். இதில், கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் நபா்களுக்கு சுமாா் 2 முதல் 3 மணி நேரம் இலவசமாக ஆக்சிஜன் வழங்கவும் திட்டமிட்டுள்ளனா்.