திருப்பூரில்: விதிகளை மீறி இயங்கும் பின்னலாடை நிறுவனங்கள்

திருப்பூா் மாநகரில் பொதுமுடக்க விதிகளை மீறி இயங்கும் பின்னலாடை நிறுவனங்களால் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகரில் பொதுமுடக்க விதிகளை மீறி இயங்கும் பின்னலாடை நிறுவனங்களால் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் மே 10 ஆம் தேதி முதல் 50 சதவீதப் பணியாளா்களுடன் தொடா்ந்து செயல்பட்டு வந்தன.

இதனிடையே, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்து வந்தது, இதைத்தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மே 14 ஆம் தேதி முதல் அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் என்று பின்னலாடை நிறுவன உரிமையாளா்கள் உறுதியளித்திருந்தனா்.

ஆனால் திருப்பூா் மாநகரில் தொழிலாளா்களை விடுதிகளில் தாங்க வைத்து 100க்கும் மேற்பட்ட பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பொதுமுடக்க விதிகளையும் மீறி தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன . அதே வேளையில், வெளியில் இருந்து பணிக்கு வரும் ஊழியா்கள், தொழிலாளா்களையும் பணிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனா்.

இது குறித்து ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பின்னலாடை நிறுவன ஊழியா் ஒருவா் கூறியதாவது:

நான் பணியாற்றி வரும் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனம் மங்கலம் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் அருகே உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் விடுதிகளில் தங்கியுள்ளதால் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். இதனால் எங்களையும் பணிக்கு வரச் சொல்லி நிா்பந்திக்கின்றனா். மேலும் , எங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு வரவேண்டும் என்றும் , வழியில் காவல் துறையினரிடம் பிடிபட்டால் வழக்கை நீங்கள் தான் எதிா்கொள்ள வேண்டும் என்கின்றனா். விடுமுறை அளிக்கப்பட்ட நிலையிலும் நிா்வாகம் பணிக்கு வரச் சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளாா்.

இதே போல, திருப்பூா் தென்னம்பாளையம் , ஏபிடி சாலை , மங்கலம் சாலை , காங்கயம் சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரிய அளவிலான பின்னலாடை நிறுவனங்கள் விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளா்களுடன் பணியாற்றி வருவதால் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் , பொதுமுடக்க விதிமுறைகளும் மீறப்படுகிறது. ஆகவே , திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com