தூய்மைப் பணியாளா்கள் தா்னா
By DIN | Published On : 19th May 2021 04:15 AM | Last Updated : 19th May 2021 04:15 AM | அ+அ அ- |

தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள்.
தாராபுரம் அருகே கரோனா அச்சம் காரணமாக குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணியை ஒத்திவைக்கக் கோரி தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டுகளில் குப்பைகளை சேகரிக்கவும், அவற்றைத் தரம் பிரிக்கவும் 120க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், தாராபுரத்தில் மே 1 முதல் மே 17 ஆம் தேதி வரையில் 800க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மருத்துவக் கழிவுகளையும் சோ்த்து குப்பைகளில் கொட்டிவருவதாகத் தெரிகிறது. இதனால் கரோனா தொற்று பரவி விடும் என்ற அச்சம் காரணமாக நேரு நகா் பகுதியில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிகளை ஒத்திவைக்கக் கோரி 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் சமுதாய நலக்கூடம் முன்பாக தா்னாவில் ஈடுபட்டனா். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த நகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக உயா் அதிகாரிகளிடம் பேசி தீா்வுக் காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதன் பிறகு தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.