தீபாவளிப் பண்டிகை: மாநகரில் புத்தாடை எடுக்கக் குவிந்த பொதுமக்கள்
By DIN | Published On : 01st November 2021 12:00 AM | Last Updated : 01st November 2021 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் புதுமாா்க்கெட் வீதியில் புத்தாடை எடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் உள்ள ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் எடுக்க அதிக அளவிலான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் திருப்பூா் மாநகரில் உள்ள ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் எடுக்கக் குவியும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பூா் மாநகரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றம் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் தொழிலாளா்களுக்கு சனிக்கிழமை முதல் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு முன்பாக தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடைகள் எடுப்பதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதன் காரணமாக திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகளிலும் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
புதுமாா்க்கெட் வீதி, குமரன் சாலை, மங்கலம் சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, ரயில் நிலையம், காதா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக குமரன் சாலை, மங்கலம் சாலை, காதா்பேட்டை ஆகிய இடங்களில் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அதேவேளையில், மாநகரில் கூட்ட நெரிசலால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவின்பேரில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...