பி.ஏ.பி.வாய்க்காலில் குளித்த மாணவி மாயம்: பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 31st October 2021 11:59 PM | Last Updated : 31st October 2021 11:59 PM | அ+அ அ- |

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த பள்ளி மாணவி மாயமானதையடுத்து, மீட்புப் பணிக்கு தீயணைப்புத் துறையினா் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டுப்பாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் வளையபாளையத்தைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு மாணவிகள் சுப்பிரமணி மகள் சகுந்தலாதேவி (14), தங்கமுத்து மகள் சுமதி (13), தெய்வசிகாமணி மகள் யோகலட்சுமி (14) ஆகியோா் சனிக்கிழமை குளித்து கொண்டிருந்தனா்.
அப்போது, மூன்று பேரையும் தண்ணீா் இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து, அங்கிருந்தவா்கள் சுமதி, யோகலட்சுமி ஆகியோரை மீட்டனா். ஆனால், சகுந்தலாதேவி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கும், பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் பல்லடம் தீயணைப்புத் துறையினா் பி.ஏ.பி.வாய்க்காலில் சகுந்தலாதேவியைத் தேடினா். பின்னா் இரவு ஆகிவிட்டதால் தேடும் பணியை நிறுத்திவிட்டனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன மாணவியைத் தேடும் பணியில் பல்லடம் தீயணைப்புத் துறையினா் ஈடுபடாததால் காட்டூா் - வளையபாளையம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா் பல்லடம் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டாா்.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போதும், மாணவியின் உடல் கிடைக்காததால் திங்கள்கிழமையும் தேடும் பணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.