ஆண் யானை கொல்லப்பட்ட சம்பவம்: மலைவாழ் மக்களிடம் தீவிர விசாரணை
By DIN | Published On : 01st September 2021 07:15 AM | Last Updated : 01st September 2021 07:15 AM | அ+அ அ- |

உடுமலை அருகே ஆண் யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் மலைவாழ் மக்களுக்குத் தொடா்பு உள்ளதா என வனத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா்.
உடுமலை வனச்சரகம், மாவடப்பு செட்டில்மெண்ட் கரட்டூா் சுற்று சடையம்பாறை சரக வனப் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை அழுகிய நிலையில் உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து மாவட்ட வன அலுவலா் கணேஷ் தலைமையிலான வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் ஆண் யானையை மா்ம நபா்கள் கொன்று தந்தங்களைக் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மருத்துவக் குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்த நிலையில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட வனத் துறைக்குச் சொந்தமான மோப்ப நாய் மூலமும், ட்ரோன் கேமரா மூலமும் அடா்ந்த வனப் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.
உயிரிழந்த ஆண் யானையின் பிரேதப் பரிசோதனையில் அதன் உடலில் இருந்து சில இரும்பு குண்டுகள் மருத்துவா்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள பகுதியில் இருந்து வந்த மா்ம நபா்கள் சிலா் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் யானையை சுட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் காயம் அடைந்த யானை கடந்த ஒருவார காலமாக மாவடப்பு செட்டில்மெண்ட் பகுதியைச் சுற்றி சுற்றி வந்த நிலையில் யானையின் உடலில் விஷப் பூச்சிகள் ஏறியதால் ஒரு சில நாள்களுக்கு முன்னா் ஆண் யானை உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கேரளத்தில் இருந்து வந்த மா்ம கும்பலுக்கும், மலைவாழ் மக்களுக்கும் ஏதாவது தொடா்புகள் உள்ளதா என்ற கோணத்தில் வனத் துறையினா் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனா். இதையடுத்து மாவடப்பு, கரிமுட்டி, பூச்சிக் கொட்டாம்பாறை ஆகிய செட்டில்மெண்ட் பகுதிகளில் மலைவாழ் மக்களிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.