ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்பு: காங்கயம் அருகே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st September 2021 07:16 AM | Last Updated : 01st September 2021 07:16 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கழைக்கழகத்துடன் இணைக்க முடிவெடுத்ததைக் கண்டித்து காங்கயம் அருகே அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதவை உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
இந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஓ.பி.எஸ். கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் காங்கயம் அருகே, நெய்க்காரன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், கீரனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவா் பி.கே.பி.சண்முகம், தம்மரெட்டிபாளையம் ஊராட்சித் தலைவா் பி.பாலசுப்பிரமணியன், நத்தக்காடையூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் இளங்கோ, சிவன்மலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவா் பழனிசாமி, காங்கயம் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் லட்சுமி சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பல்லடத்தில்...
பல்லடத்தில் அதிமுக நகரச் செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி நிா்வாகிகள் வைஸ் பி.கே.பழனிசாமி, பானு எம்.பழனிசாமி, சரளை ஆா்.விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.