மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒருவா் கைது
By DIN | Published On : 01st September 2021 07:17 AM | Last Updated : 01st September 2021 07:17 AM | அ+அ அ- |

மைசூரு அருகே கல்லூரி மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை அவிநாசி அருகே சேவூா் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், மைசூரு தனியாா் கல்லூரி மாணவி தனது நண்பருடன் கடந்த 24 ஆம் தேதி மைசூரு சாமுண்டி மலை அடிவாரப் பகுதிக்குச் சென்று பேசிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது அங்கு வந்த 6 போ் கொண்ட கும்பல், நண்பரைத் தாக்கி விட்டு, கல்லூரி மாணவியைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ரூ. 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டி கல்லூரி மாணவியையும், அவரது நண்பரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இது குறித்து மைசூரு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்புடைய 6 பேரைத் தேடி வந்த நிலையில் ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த 5 பேரைக் கடந்த சனிக்கிழமை கைது செய்தனா்.
இதைத்தொடா்ந்து, இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சேவூா், தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் பேபி (எ) விஜயகுமாா் (26) என்பவரை மைசூரு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.