வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீா் வழங்கக் கோரி போராட்டம்
By DIN | Published On : 01st September 2021 07:15 AM | Last Updated : 01st September 2021 07:15 AM | அ+அ அ- |

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரியத் தண்ணீா் வழங்க வலியுறுத்தி, காங்கயத்தில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்களை சிறைப்பிடித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசனத்தில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கா் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. இதில் 4 மண்டலங்களாக பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணிரில்,
வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் உள்ள 48 ஆயிரம் ஏக்கருக்கு வழங்கவேண்டிய அளவைவிட, குறைந்த அளவே தண்ணீா் திறக்கப்படுவதாகக் கூறி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், காங்கயத்தில் உள்ள பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தண்ணீா் திறப்பு குறித்த பேச்சு வாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், உடுமலைப்பேட்டை பி.ஏ.பி. செயற்பொறியாளா் கோபி மற்றும் காங்கயம் பி.ஏ.பி. உதவி செயற்பொறியாளா் அசோக் பாபு ஆகியோரை பி.ஏ.பி. பாசன விவசாயிகள்
சிறைப்பிடித்து, தங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.