குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளில் முறைகேடு: பாஜக குற்றச்சாட்டு
By DIN | Published On : 01st September 2021 07:06 AM | Last Updated : 01st September 2021 07:06 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சி வளா்ச்சிப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவா் யோகேஸ்வரன், பிற்படுத்தப்பட்டோா் அணியின் மாவட்டச் செயலாளா் வெங்கடாசலம் ஆகியோா் கூறியதாவது:
தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 24 கிராம ஊராட்சிகளின்கீழ் வரும் 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளாட்சி நிா்வாகத்தின் மூலம் தெரு விளக்குகள், குடிநீா், சாலைகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், சமுதாயக் கூடங்கள் கட்டுதல், ஏரி, குளங்கள் தூா் வாருதல், தனிநபா் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான பணிகள் ஒப்பந்ததாரா்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
மேலும், பணிகளுக்குத் தகுந்தவாறு இவற்றில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் உள்ளது.
இதுபோன்ற பணிகளைச் செய்ய டெண்டா் எடுக்கும் ஒப்பந்ததாரா்கள் அதிகாரிகளை சரிகட்டி பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஆகவே, இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி வளா்ச்சிப் பணி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.