உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா

உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் 15 நாள் தேர்த் திருவிழா தொடங்கியது.
உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் தேர்த் திருவிழா.
உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் தேர்த் திருவிழா.

உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் 15 நாள் தேர்த் திருவிழா தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் 15 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கரோனா பாதிப்புக் காரணத்தால் நடைபெறாத இத்திருக்கோயிலின் தேர்த் திருவிழா பொதுமக்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் இவ்வாண்டு வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு துவங்கப்பட்டுள்ளன. இவ்வாண்டும் பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை மாலை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் வழக்கம் போல் தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கி நடந்து வருகிறது.

ஏப்ரல் 12ஆம் தேதி மாலை கம்பம் போடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 14ஆம் தேதி இரவு வாஸ்துசாந்தி, கிராம சாந்தி பூஜையும் நடைபெற்றது. ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ந்தது. இத்திருக்கோயிலின் சிறப்பான பிரார்த்தனைகள் பூவோடு எடுத்தல், மாவிளக்கிடுதல் மற்றும் திருத்தேர் இழுத்தல் ஆகியவையாகும். இவைகளை இந்த திருவிழாவின் போது நிறைவேற்றுதல் காலங்காலமாக இக்கோயிலில் நடந்து வருகின்றன. அன்று மாலை 2.00 மணி முதல் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி துவங்கியது. பூவோடு எடுக்கும் பிரார்த்தனை தொடர்ந்து நடந்து ஏப்ரல்19 ம் தேதி இரவு 10 மணிக்கு நிறைவு பெறும்.

இன்று அதிகாலை 6.00 மணி முதல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கோயிலில் வந்து பூவோடு மாலை, சாமான்கள் மற்றும் இதர பொருட்களுக்காக பணம் கட்டி பூவோடு எடுக்கிறார்கள். இவ்வாண்டு பூவோடு எடுப்பவர்கள் சுமார் 3500 முதல் 4000 பேர் வரை எடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 20ஆம் தேதி அதிகாலை 4.00 மணி முதல் மாவிளக்கு பூஜையும், மாலை 3.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், விழாவின் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. திருக்கல்யாணம் முடிந்த மறுநாள் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 21ஆம் தேதி காலை 7 மணி அளவில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து ஏப்ரல் 22 ம் தேதி காலை அம்மன் ஊஞ்சல் உற்சவமும், மாலை 4.00 மணிக்கு பக்தர்கள் கலந்து கொள்ளும் ஸ்ரீலலிதா திரிசதி அர்ச்சனையும் இரவு 8 மணிக்கு பரிவேட்டை புறப்பாடும் நடைபெறும்.

ஏப்ரல் 23ஆம் தேதி சனிக்கிழமை காலை10.30 மணிக்கு திருவிழா கொடியிறக்கி, 11.30 மணிக்கு மகாபிஷேகமும், நண்பகல் 12.30 மணிக்கு மஞ்சள் நீராட்டும் நடந்து. மாலை 7.00 மணிக்கு மேல் புஷ்பபல்லாக்கில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

செய்தி மற்றும் படங்கள் இரா. இரகுநாதன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com