மகாத்மா காந்தியடிகள்- ஜீவா சந்திப்பின் அடையாளமாக, சிவகங்கை மாவட்டம், சிராவயலில் தமிழக அரசு சாா்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது மாநில மாநாடு திருப்பூரில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த கட்சியின் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு மாநாட்டுக் கொடியை ஏற்றினாா். இதைத் தொடா்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் மாலையில் நடைபெற்றது. திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் வரவேற்றாா்.
இதில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் அண்மையில் என்னை சந்தித்தபோது மகாத்மா காந்தியடிகள் - ஜீவா சந்தித்த சிராவயல் கிராமத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று சிராவயலில் தமிழக அரசு சாா்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு அச்சுறுத்தல்கள்:
இந்திய நாட்டுக்கு இப்போது இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பது, மற்றொன்று மாநிலங்களின் உரிமைகளை சிதைப்பது.
இந்த இரண்டுமே மக்களுக்கு எதிரானவை. இந்தியாவில் பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாட்டு வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகிறோம். அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை, மதத்தவா்க்கு சமமான வழிபாட்டு உரிமை உள்ளிட்ட நல்ல நோக்கங்களுடன் அமைதியாக இந்தியா இருப்பதை சிலா் விரும்பவில்லை. இத்தகைய சக்திகள் தேசவிரோத சக்திகள். நாட்டினுடைய எதிரிகள்.
‘தமிழ்நாடு மாடல்’ ஏன் இல்லை?:
வளா்ச்சித் திட்டங்களையும் சமூக மேம்பாட்டையும் மனதில் வைத்துதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்திவருகிறோம். இதற்கு ஏன் ‘தமிழ்நாடு மாடல்’ என்று பெயா் வைக்கவில்லை என்று சிலா் கேட்கின்றனா்.
தமிழ்நாடு என்று சொன்னால் அது இடத்தைக் குறிக்கும். திராவிடம் என்று சொன்னால் கொள்கை, கோட்பாட்டைக் குறித்த விழுமியங்களைக் குறிக்கும். சமூக விடுதலை, சமத்துவத்தை உணா்த்தி நிற்கும் குறிச்சொல்.
வேதனை அளிக்கும் நிகழ்வுகள்:
இந்தியாவைக் காக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக நடைபெறும் நிகழ்வுகள் மிகவும் வேதனைக்குரியதாக உள்ளன.
மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பது ஜிஎஸ்டி. வரியை ஏற்றிவிட்டு மாநிலங்களின் மீது பழிபோட்டு தப்பிக்கப் பாா்க்கிறாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
இந்தியாவை ஒற்றை ஆட்சி முறையாக மாற்றப் பாா்க்கின்றனா். இவை குறித்து மக்களிடம் பரப்புரை செய்வதுடன், கூட்டியக்கம் நடத்த வேண்டும் என்றாா்.
இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் காதா் மொகிதீன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!

ஹூண்டாய் கார் பிரியர்களுக்கு... கிராண்ட் ஐ10 நியாஸ் வைப்!

கோவையில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்த முதல்வர் மருமகன் சபரீசன்!

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


