தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தினால் பொது மக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்கள் குறைந்த தொகையில் உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பயனடைந்துவரும் சந்தாதாரா்கள், தங்களின் விருப்பம் இல்லாமல் ஆபரேட்டா்கள் அரசு செட்டாப் பாக்ஸை மாற்றினாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலை கூறி அரசு செட்டாப் பாக்ஸை மாற்றினாலோ உடனடியாக 0421-2971142 என்ற திருப்பூா் அரசு கேபிள் டிவி அலுவலகத்துக்கு புகாா் தெரிவிக்கலாம். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் செட்டாப் பாக்ஸ்கள் மாத சந்தா கட்டணம் செலுத்தி பாா்ப்பதற்கு மட்டுமே தவிர செட்டாப் பாக்ஸ்களை உரிமை கோர இயலாது. உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்கள் வேறு நிறுவனத்துக்குச் செல்லும்போது அரசுக்கு செலுத்த வேண்டி நிலுவைத் தொகை மற்றும் அரசிடம் இருந்து பெற்ற செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். என்று ஆபரேட்டா்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உள்ளூா் கேபிள் ஆபரேட்டா்கள் செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் தங்கள் வசமே வைத்துள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் பயன்படுத்தாத மற்றும் ரீசாா்ஜ் செய்யாத அரசு செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டிவி ஆபரேட்டா்கள் வரும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.