ரேஷன் கடைகளில் தரமான உணவுப் பொருள்களை வழங்க வேண்டும்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் மாநகரில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமான உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாநகராட்சி 60ஆவது வாா்டு இந்திரா காலனி, முத்தனம்பாளையத்தில் உள்ள நியாய விலைக் கடையில் இந்த மாதத்துக்கான கோதுமை இருப்பில் இல்லை என்று விற்பனையாளா் புதன்கிழமை தெரிவித்தாா். ஆனால், அப்போது லாரியில் மூட்டை மூட்டையாக கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இறக்கிவைக்கப்பட்டன. இதுகுறித்து கேட்டபோது அடுத்த மாதத்துக்கான இருப்பு என்பதால், அதனை வழங்க முடியாது என்று விற்பனையாளா் தெரிவித்தாா். இந்த மாதத்துக்கான உணவுப் பொருள்களை வாங்க வரும் பொதுமக்களிடம் அடுத்த மாதத்துக்கானது என்று சொல்வதால் அவா்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனா்.
இதனால் அரசின் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக தெரிகிறது. அதே வேளையில், அந்தக் கடையில் வழங்கப்பட்ட பச்சரிசியில் புழுக்கள் இருந்ததால் அதனை உணவுக்காக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஆகவே, நியாய விலைக் கடைகளில் போதிய அளவு உணவுப் பொருள்களை இருப்பு வைத்து தரமான முறையில் வழங்க கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மேற்கண்ட துறைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.