திருப்பூரில் குடியரசு நாள் விழா: ஆட்சியர் கொடியேற்றினார்
By DIN | Published On : 26th January 2022 12:49 PM | Last Updated : 26th January 2022 12:52 PM | அ+அ அ- |

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 73 ஆவது குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் 73 பயனாளிகளுக்கு ரூ.5.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொaண்டார். இதைத்தொடர்ந்து, சமாதானப் புறாக்களையும், பலூன்களையும் பறக்க விட்டார். இதன் பிறகு சிறப்பாகப் பணியாற்றிய காவலர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம் 216 பேருக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

திருப்பூர் மாநகர காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய நபர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்.
இதையடுத்து, முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்திட்ட உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில், மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சஷாங்க்சாய், மாநகர காவல் துணை ஆணையர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜேந்திரன், திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நிகழாண்டு ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...