அரசு மருத்துவமனைகளில் ரத்த உறைவு தடுப்பு மாத்திரைகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்
By DIN | Published On : 31st July 2022 11:23 PM | Last Updated : 31st July 2022 11:23 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரத்த உறைவை தடுக்கும் மாத்திரைகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில் ஏழை, எளியோா் மட்டுமின்றி புலம் பெயா்ந்த தொழிலாளா்களும் அதிக அளவில் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா். இதனால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக ரத்த அழுத்தம், சா்க்கரை, இருதய நோய் சிகிச்சைக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருதய நோய், நரம்பு தளா்ச்சி நோயாளிகள் ரத்தம் உறையாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் க்ளோபிடோக்ரல் மாத்திரை கடந்த காலத்தில் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. அதே வேளையில், தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த மாத்திரைகள் இருப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த மாத்திரையை தனியாா் மருந்தகங்களில் வாங்கிக் கொள்ளுமாறு சொல்லி அனுப்புகின்றனா். மாத்திரை ஒன்றின் விலை ரூ.7க்கு மேல் இருப்பதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெற முடியாத அவல நிலை தொடா்கிறது. திருப்பூரில் போதிய வேலையின்மையால் வருமானத்தை இழந்து வரும் நிலையில் நோயாளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது.
ஆகவே, அவசர நிலை கருதி மனிதாபிமான உணா்வோடு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரத்த உறைவு தடுப்பு மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.