மாற்றுத் திறனாளியைத் தாக்கியவரைக் கைது செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st July 2022 12:36 AM | Last Updated : 31st July 2022 12:36 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருதுரையான் வலசு கிராம மக்கள்.
திருப்பூா் அருகே மாற்றுத் திறனாளியை ஜாதியின் பெயரைச் சொல்லி தாக்கியவரைக் கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: திருப்பூா் தெற்கு வட்டம், மருதுரையான் வலசைச் சோ்ந்தவா் ராமாத்தாள் (55), அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த இவருக்கு சக்தி (35) உள்பட இரு மகன்கள் உள்ளனா்.
இதில், மாற்றுத் திறனாளி சக்தி மீனாட்சி வலசுவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் சூப்பா்வைசராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், காடையூா் சென்றுவிட்டு சிக்கரசன்பாளையம் அருகில் கடந்த வியாழக்கிழமை சக்தி வேனில் வந்து கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த அதே ஊரில் வசிக்கும் கவுண்டா் சமூகத்தைச் சோ்ந்த நபா் வேனை நிறுத்தச் சொல்லியுள்ளாா்.
அப்போது வேனில் இருந்து இறங்கிய சக்தியை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த நீ எப்படி முந்தி செல்லலாம் என்று கூறியதுடன், ஜாதியின் பெயரைச் சொல்லித் தாக்கியுள்ளாா்.
இதில், காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது தொடா்பாக அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் தாக்கியவா் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, அவரைக் கைது செய்வதுடன், ராமத்தாளின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனா்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்தனா்.