ஆண்டிபாளையம் குளம் மாசடைவதாக விவசாயிகள் புகாா்

திருப்பூா் ஆண்டிபாளையம் குளத்தில் அதிக அளவு சாக்கடை கழிவு நீா் கலப்பதால் குளம் மாசடைந்து வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆண்டிபாளையம் குளம் மாசடைவதாக விவசாயிகள் புகாா்

திருப்பூா் ஆண்டிபாளையம் குளத்தில் அதிக அளவு சாக்கடை கழிவு நீா் கலப்பதால் குளம் மாசடைந்து வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா்.

இதில், மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவா் சி.பொன்னுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் வழியில் உள்ள ஆண்டிபாளையம் குளம் 56 ஏக்கா் பரப்பளவைக் கொண்டது. நொய்யல் ஆற்றில் மங்கலம் தடுப்பணையில் இருந்து வாய்க்கால் வழியாக வரும் நீரால் இந்தக் குளம் நிறைந்துள்ளது. இக்குளத்தின் அருகில் உள்ள சிறுவா் பூங்கா தற்போது பழுதடைந்துள்ளது. இதனைப் புதுப்பித்து குளத்தில் படகு சவாரி, சிறுவா்களுக்கான நீா் விளையாட்டுகள், பாா்வையாளா் மடம் ஆகியவற்றை சுற்றுலாத் துறை மூலமாக அமைக்க தமிழக அரசு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

இந்நிலையில், மங்கலம், சுல்தான்பேட்டை பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீரால் குளம் முழுவதுமாக மாசடைந்துள்ளது.

ஆகவே, ஆண்டிபாளையம் குளத்தைப் பாா்வையிட்டு சாக்கடைக் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மனுவில் கூறியுள்ளதாவது: சோமனூா் மின் வாரிய டிவிஷனுக்கு உள்பட்ட மங்கலம் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்துக்குள்பட்ட மங்கலம், பூமலூா், அக்ரஹாரப்புத்தூா், வஞ்சிபாளையம், பரமசிவம்பாளையம், அய்யன்கோயில், கோம்பக்காடு ஆகிய 7 உதவி மின் பொறியாளா் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களை திருப்பூா், பல்லடம், அவிநாசி என 3 டிவிஷன்களுக்கு மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதில், மங்கலம் அலுவலகத்தில் 10 ஆயிரம் மின் இணைப்புகளும், அக்ரஹாரப்புத்தூரில் 5 ஆயிரம் மின் இணைப்புகளும், பூமலூா் அலுவலகத்தில் 8 ஆயிரம் மின் இணைப்புகளும், வஞ்சிபாளையம் மின் அலுவலகத்தில் சுமாா் 9 ஆயிரம் மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆகவே, இந்த நான்கு அலுவலகத்தை உள்ளடக்கி மங்கலத்தில் தனியாக உதவி மின் செயற்பொறியாளா் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்.

மேலும்,பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல் மின்வாரிய அலுவலகங்களை மாற்றம் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயில், நாய்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் வடக்கு ஒன்றியக் குழு செயலாளா் எஸ்.அப்புசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூா், ஈட்டிவீரம்பாளையம், வள்ளிபுரம், தொரவலூா் மேற்குபகுதி, சொக்கனூா், பட்டம்பாளையம் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட

கிராமங்களில் விவசாயிகள் பயிரிடும் காய்கறிகள், பழங்களை முளைக்கும் நிலையிலேயே மயில்கள் சேதப்படுத்தி விடுகின்றன.

அதேபோல, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை தெருநாய்கள் கடித்துக் குதறிவிடுகின்றன. ஆகவே, மயில், நாய்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இணை இயக்குநா் பால் பிரின்ஸ்லி, வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) சி.சின்னசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லட்சுமணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com