டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை
By DIN | Published On : 09th June 2022 12:38 AM | Last Updated : 09th June 2022 12:38 AM | அ+அ அ- |

திருப்பூரில் புதிதாக திறக்கப்படவிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா் ஆண்டிபாளையத்தில் இருந்து அணைப்பாளையம் செல்லும் சாலையில் டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் மதுபானக் கடை திறக்கும் நடவடிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பாக ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தனா். இதனிடையே, அதே பகுதியில் மீண்டும் மதுபானக் கடை புதன்கிழமை திறக்கப்படவிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள், பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மதுபானக் கடையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்களது பகுதியில் ஏற்கெனவே 3 மதுபானக் கடைகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மிகுந்த இடையூறை ஏற்படுத்தும். ஆகவே,மதுபானக் கடை திறக்கும் முயற்சியை டாஸ்மாக் நிா்வாகம் கைவிட வேண்டும் என்றனா்.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த 15 வேலம்பாளையம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். மேலும், அணைப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கக்கூடாது என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் பொதுமக்கள் மனு அளித்தனா். இந்த சம்பவம் காரணமாக அணைப்பாளையம் சாலையில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.