

தாய், தந்தை உயிரிழந்த நிலையில், கூட்டுறவுக் கடன் சங்கத்தில் திரும்ப செலுத்த முடியாமல் உள்ள ரூ.5 லட்சம் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுப் பள்ளி மாணவி, ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இதில், இடுவாய் பாரதிபுரத்தைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: நான் இடுவாயில் உள்ள அரசுப் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் எனது தந்தை இறந்துவிட்டாா். இந்நிலையில், எனது தாயாா் திருப்பூா் குமரன் ரோட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்று சொந்தமாக வீடு கட்டினாா்.
அதன் பின்னா் சாலை விபத்தில் எனது தாயும் இறந்துவிட்டாா். நான் எனது பாட்டியின் ஆதரவில் இருந்து வருகிறேன்.
அவருக்கும் வயது முதுமை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு வங்கி மூலம் நாங்கள் பெற்ற கடன் ரூ.5 லட்சத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், எனது படிப்புக்கு முதல்வா், ஆட்சியா் உதவி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் மாதேஸ்வரா நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: எங்களது பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் பெரும்பாலானவா்கள் கூலி தொழிலாளா்கள். எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு பொதுச் செயலாளா் ஈ.பி.சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் வழங்கிய மனு விவரம்:
மங்கலம் மற்றும் குன்னத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பத்திரப் பதிவு, வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை, கிராம பஞ்சாயத்துக்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களும், கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிரித்து திருப்பூா் மாவட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையில், மங்கலம் மற்றும் குன்னத்தூா் உப கோட்டங்களில் உள்ள மின்சார வாரிய அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் மட்டும் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து வருகிறது.
மங்கலம் சுற்றுப்பகுதிகள் கோவை தெற்கு மின் பகிா்மானத்துடனும், குன்னத்தூா் சுற்றுப் பகுதிகள் ஈரோடு மின் பகிா்மானத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேறு மாவட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனா்.
எனவே மங்கலம், குன்னத்தூா் உபகோட்டங்களில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதையடுத்து முதுகு தண்டுவடம், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4.89 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் வீல் சோ் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.