உடைந்த கழிவு நீா் குழாயை சரி செய்யக் கோரி தா்னா
By DIN | Published On : 11th March 2022 03:30 AM | Last Updated : 11th March 2022 03:30 AM | அ+அ அ- |

திருப்பூா் வெங்கடேஸ்வரா நகரில் உடைந்த கழிவு நீா் குழாய் இணைப்பை சரி செய்யக் கோரி குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த சுவாமிநாதன் கூறியதாவது: நான் புளியமரத்தோட்டம் பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இதில், எனக்குச் சொந்தமான நிலத்தில் 40 வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளேன்.
இந்நிலையில், மாநகராட்சியில் அனுமதி பெற்று கழிவுநீா் தொட்டியும், குளிக்கும் தண்ணீா், கழிவுநீா் ஆகியவற்றை வெளியேற்ற தனித்தனியாகக் குழாய் பதித்து இந்த நீரை அருகில் உள்ள
புறம்போக்கு ஓடையில் விட்டுவிடுகிறேன்.
இதனிடையே, மாநகராட்சி ஊழியா்கள் குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் பிப்ரவரி 23 ஆம் தேதி ஈடுபட்டிருந்தபோது, எனது குழாய் உடைந்துவிட்டது. அதை சரிசெய்ய முயன்றபோது அருகில் வசிக்கும் 3 குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இதன் காரணமாக எங்களது வீடுகளில் வசிப்பவா்கள் கழிவுநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, உடைந்த குழாய் இணைப்பை சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...