தாராபுரம் அருகே காரில் 140 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திச் சென்ற இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து தாராபுரத்துக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை சிலா் கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சின்னக்கம்பாளையம் பிரிவில் தாராபுரம் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா்.
இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக சிவசக்தி காலனியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் எஸ்.அருண்குமாா் (26) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 140 கிலோ புகையிலைப் பொருள்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.