அருந்ததியா் சமூகத்தினரின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்
By DIN | Published On : 17th March 2022 12:50 AM | Last Updated : 17th March 2022 12:50 AM | அ+அ அ- |

திருப்பூா்: பல்லடம் அருகே உள்ள சாமளாபுரத்தில் அருந்ததியா் சமூகத்தினரின் 135 வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கருணை அடிப்படையில் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாகுல் ஹமீதுவிடம், சாமளாபுரம் நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் கரு.தமிழரசன் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பல்லடம் அருகே உள்ள சாமளாபுரத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக 135 வீடுகளில் அருந்ததியா் சமூகத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், அவா்களது வீடுகளை 21 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று நீா்வள ஆதார அமைப்பு சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், 135 வீடுகளில் வசிக்கும் 860 பேரின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே, சாமளாபுரத்தில் அருந்ததியா் சமூகத்தினரின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கருணை அடிப்படையில் கைவிடுவதுடன், வகைமாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.