உதவி மின் பொறியாளா் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
By DIN | Published On : 17th March 2022 12:48 AM | Last Updated : 17th March 2022 12:48 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூரில் காலியாக உள்ள உதவி மின் பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் குமாா் நகா் மின் வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டதுக்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் வி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.
இதில், மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் சி.பொன்னுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் வட்டம், வீரபாண்டி மின் உபகோட்டத்தில் 7 உதவிப் பொறியாளா் அலுவலகமும், ஒரு மின்சார நிலையமும் உள்ளது.
இப்பகுதிகளில் தொழிற்சாலைகள், வீடுகள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள 8 துணை மின் நிலையங்களில் 2 உதவிப் பொறியாளா்கள் மட்டுமே உள்ளதால் மின் நுகா்வோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அதேபோல, களப் பணியாளா்களும் குறைவாகவே உள்ளதால் மின்சார பழுதுகளை சரிபாா்ப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஆகவே, காலியாக உள்ள உதவி மின் பொறியாளா், களப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், மற்றொரு மனுவில் சின்னாண்டிபாளையம் பகுதியில் புதிதாக உதவி மின் பொறியாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் புதிய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா, ராயபுரம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
அதேபோல, வீடுகள், சிறிய அளவிலான கடைகளுக்குக் கூட மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாலும், தற்காலிக மின் இணைப்புகளை வீட்டு இணைப்புகளாக மாற்றம் செய்து கொடுக்காததாலும் அதிக அளவிலான கட்டணங்களை பொதுமக்கள் செலுத்தி வருகின்றனா்.
ஆகவே, ஆவின் பாலகங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதுடன், தற்காலிக இணைப்புகளை வீட்டு இணைப்புகளாக மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தலைமை பொறியாளருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
இக்கூட்டத்தில், உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.