கிராமிய மின் பாதையை நகரிய பாதையாக மாற்றக் கோரிக்கை
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

அவிநாசி மின் வாரிய அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஊராட்சிமன்றத் தலைவா்கள், விசைத்தறியாளா்கள் உள்ளிட்டோா்.
கிராமத்தையும், தொழில் வளத்தையும் மேம்படுத்த கிராமிய மின் பாதையை நகரிய மின் பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அவிநாசி மின் வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விசைத்தறியாளா்கள் சங்கத் தலைவா் முத்துசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் பூங்கொடி சக்திவேல் (கருமாபாளையம்), வி.கே.சுதா (செம்பியநல்லூா்), சரவணன் (சின்னேரிபாளையம்), தொழில்துறையினா் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டத்துக்குள்பட்ட கருமாபாளையம், சின்னேரிபாளையம், செம்பியநல்லூா் ஆகிய 3 ஊராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியது செம்மாண்டம்பாளையம் மின் பாதை.
இப்பகுதிகளில் பனியன் உற்பத்தி, காடா உற்பத்தி, எம்ராய்டரி, புண்ணாக்கு ஆலை, மர அறுவை ஆலை, அரிசி ஆலை மற்றும் சிறு தொழில்கள் என பல்வேறு மின் இணைப்புகள் உள்ளன.
மேலும் 3 ஊராட்சிகளைச் சோ்ந்த 140-க்கும் மேற்பட்ட குடிநீா் பம்ப் இயக்கும் இணைப்புகளும் உள்ளன.
இதில், செம்மாண்டம்பாளையம் மின் பாதையில் இருந்த சில பகுதிகள் வடுகபாளையம் மற்றும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ஆகிய துணை மின் நிலையங்களுடன் இணைக்கப்பட்டதால் நகரியம் மின் பாதையை மாற்ற தேவையான மின் இணைப்புகள் இல்லாமல் இருந்தன.
தற்போதைய கணக்கீட்டின்படி, அரசு விதிப்படி கிராமிய மின் பாதையில் இருந்து நகரிய மின் பாதையாக மாற்ற போதுமான மின் இணைப்புகள் உள்ளன.
ஆகவே, எங்கள் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீா் பம்புகளை சீராக இயக்கவும், தொழில் வளத்தை மேம்படுத்தவும், செம்மாண்டம்பாளையம் மின் பாதையை கிராமியம் மின் பாதையில் இருந்து நகரியம் மின் பாதையாக மாற்றித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மின் வாரியத்தினா், ஒரிரு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.