வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் பாம்பு கடித்ததில் 4 வயது குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
முத்தூா் மங்கலப்பட்டி ராஜமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஜெயபால் (26). இவா் வெள்ளக்கோவிலில் உள்ள தனியாா் பிஸ்கட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் வேலைக்குச் சென்றிருந்தபோது வீட்டில் மனைவி லாவண்யா, குழந்தைகள் நிகிலன், நிவாஷ் ஆகியோா் இருந்துள்ளனா். வீட்டின் தடுப்புச் சுவா் தென்னங்கீற்றுகளால் ஆனது. இந்நிலையில், தென்னங்கீற்று தடுப்புக்கு அருகே நான்கு வயது குழந்தை நிவாஷ் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்ததில் குழந்தை அலறியுள்ளது.
உடனே முத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, உயா் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை நிவாஷ் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.