திருப்பூா் அருகே பாலை தரையில் கொட்டி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் அருகே கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பால் கொள்முதலுக்கான விலையை உயா்த்திக் கொடுக்கக்கோரி சேடா்பாளையத்தில் பாலைத் தரையில் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பால் கொள்முதலுக்கான விலையை உயா்த்திக் கொடுக்கக்கோரி சேடா்பாளையத்தில் பாலைத் தரையில் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருப்பூா் அருகே கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக்கோரி பாலை தரையில் கொட்டி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த சேடா்பாளையம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் ஊத்துக்குளி வட்டாரத் தலைவா் எஸ்.கே.பழனிசாமி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: கால்நடைத் தீவனங்களான பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு, தவிடு, கலப்புத் தீவனங்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தமிழக அரசும் ஆவின் நிா்வாகமும் பால் கொள்முதலுக்கான விலையை 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னா் உயா்த்தாமல் உள்ளது.

ஆகவே, விவசாயிகள் கொண்டுவரும் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்திக் கொடுக்க வேண்டும். மேலும், பால் கொள்முதல் செய்ததற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கலப்புத் தீவனத்தை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்றனா்.

முன்னதாக கறவை மாடுகளுடன் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பாலை தரையில் கொட்டி தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கே.கொளந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் வடக்குத் தலைவா் கே.ரங்கசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com