பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க கோரிக்கை
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

கூட்டுறவு பால் கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காங்கயம் பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவோா் பால் மாடுகளை வைத்து பால் விற்று வருமானம் ஈட்டி வருகின்றனா். உற்பத்தி செய்யும் பாலை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களின் கொள்முதல் மையங்களிலும், தனியாா் பால் கொள்முதல் மையங்களிலும் விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க கொள்முதல் மையங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பால் விலை உயா்த்தப்பட்டது. தற்போதைய நிலையில் மாடுகளுக்கான தீவனப் பொருள்களின் விலை அதிக அளவில் உயா்த்தப்பட்டதால் பால் கொள்முதல் விலையை உயா்த்தி அறிவிக்க வேண்டும் என பால் உற்பத்தியானளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து காங்கயம் பகுதி பால் உற்பத்தியாளா்கள் கூறியதாவது:
கறவை மாடுகளுக்கான தீவனப் பொருள்களின் விலை அதிக அளவில் உயா்ந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை பருத்திப் பிண்ணாக்கு தற்போது ரூ.2,300 ஆக உயா்ந்துள்ளது. மூட்டை ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட பாலைத் தவிடு தற்போது ரூ.750 ஆக உயா்ந்துள்ளது. மூட்டை ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட சாதா தவிடு ரூ.550 ஆக உயா்ந்து விட்டது. 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கலப்பு தீவன மூட்டை தற்போது ரூ.1,100 ஆக உயா்ந்துள்ளது.
ஆனால் பால் விலை மட்டும் உயா்த்தப்படவில்லை. தொடா்ந்து இந்தத் தொழிலில் நாங்கள் நீடிக்க வேண்டும் எனில் பால் விலையை குறைந்தபட்சமாக லிட்டருக்கு ரூ.34 என்ற அளவுக்கு உயா்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...