வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.கருணாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்புச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.
தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், புள்ளகாளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத்தொடா்ந்து, பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம் கண்டியன் கோவில் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ஆலாம்பாளையத்தில் குட்டை தூா் வாரும் பணி, திருப்பூா் மாநகராட்சி 3, 4 ஆவது மண்டலத்தில் அம்ரூத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.