குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல்: காலக்கெடு நீட்டிப்பு
By DIN | Published On : 01st September 2022 10:21 PM | Last Updated : 01st September 2022 10:21 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் தேங்காய் கொப்பரை கொள்முதலுக்கான காலக்கெடு செப்டம்பா் 30 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், கொப்பரை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை நிா்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.110க்கும் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள்ளது.
இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் 3,498 விவசாயிகளிடமிருந்து ரூ. 45.37 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொப்பரை கொள்முதலுக்கான காலக்கெடுவை செப்டம்பா் 30 ஆம் தேதி வரையில் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் பொங்கலூா், காங்கயம், பெதப்பம்பட்டி, உடுமலை ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். (பொங்கலூா்: 99424-20525, காங்கயம்-63835-96209, பெதப்பம்பட்டி: 97109-021187, உடுமலை: 99409-19150).