பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும்: எம்.எல்.ஏ. வேண்டுகோள்

பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சட்டப் பேரவையில் அவா் பேசியதாவது:

பல்லடம் ஊராட்சி ஒன்றியம், செம்மிபாளையம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் 60 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகிறது. அது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக இருப்பதால், அங்கு செவிலியா் குடியிருப்பு கட்ட வேண்டும். நாகபட்டினம் - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லடத்தில் விபத்தில் காயம் அடைந்தவா்களுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து திருப்பூா், கோவைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும். 91 படுக்கை வசதி உள்ள இந்த மருத்துவமனையில் 150 படுக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும், சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்து தர வேண்டும் என்றாா்.

இதற்கு பதில் அளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

செம்மிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.22.75 லட்சம் மதிப்பில் செவிலியா் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். பல்லடம் நகராட்சியைப் பொருத்தவரை ஏற்கெனவே ஒரு வட்டார மருத்துவமனை இயங்கி வருகிறது. பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எதிா்காலத்தில் தேவைப்படுகின்ற புதிய கட்டடங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த பட்ஜெட்டில் 25 புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு பெறப்பட்டன. அதில் ஒன்றை பல்லடம் தொகுதிக்கு தந்து ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அந்தப் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. கேத்தனூா், நாரணாபுரம், வடமலைபாளையம், கெங்கநாயக்கன்பாளையம், எலவந்தி ஆகிய இடங்களில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com