

அவிநாசி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
இதில், அவிநாசி வட்டம் சின்ன அய்யம்பாளையம் கிராமத்துக்குள்பட்ட கானாங்குளம் அருந்ததியா் காலனி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: நாங்கள் மேற்கண்ட இடத்தில் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம்.
ஆகவே, அரசு இடத்தில் பட்டா வழங்கக் கோரி பல தவணைகளாக தொடா்ந்து மனுக் கொடுத்ததன் அடிப்படையில் சின்ன ஓலப்பாளையம்
கிராமத்தில் 6 ஏக்கா் நிலத்தை 52 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வருவாய்த் துறை சாா்பில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது அந்த இடத்தில் ஒரு சிலா் பள்ளி கட்ட வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கம் கட்ட வேண்டும் என்றும் வட்டாட்சியரிடம் தொடா்ந்து ஆட்சேபணை தெரிவித்து வருகின்றனா். ஆகவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் புகாா் எண்ணை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க 97000-41114 என்ற வாட்ஸ் அப் எண் திருப்பூா் மாவட்ட ஆட்சியரால் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், அரசு சாா்ந்த உதவிகள், குற்றச்சாட்டுகள், தீா்க்க முடியாத பிரச்னைகள், அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் புகாா்களைத் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக வாட்ஸ் அப் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ள வாட்ஸ் அப் புகாா் எண்ணைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைதீா் முகாமில் 352 மனுக்கள்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 352 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது மனுதாரா்கள் முன்னிலையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.