

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயா்வு தொடா்பாக திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை உறுப்பினா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உயா்த்தப்பட்ட மின் கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், அடுத்தகட்ட போராட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் உள்ள டீமா அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் டீமா தலைவா் எம்.பி.முத்துரத்தினம், டெக்பா தலைவா் ஸ்ரீகாந்த், நிட்மா இணைத் தலைவா் கோபிநாத் பழனியப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயா்வைத் திரும்பப்பெறக்கோரி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை உறுப்பினா்களையும் வரும் நவம்பா் 6-ஆம் தேதி அழைத்து தொழில் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தி சட்டப் பேரவையில் முறையிடச் செய்வது, டிசம்பா் 4 ஆம் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது, டிசம்பா் 18 ஆம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பின் கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.