சிஐடியூ அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மாநிலக் குழு கூட்டம்
By DIN | Published On : 18th April 2023 12:51 AM | Last Updated : 18th April 2023 12:51 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க (சிஐடியு) மாநில சம்மேளன குழுக் கூட்டம் அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசுப் போக்குவரத்து கழக தொழிற்சங்கம் பல்வேறு சிறப்புகளை உடையதாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஏராளமான பிரச்னைகளைத் சந்தித்து வருகிறது. குறிப்பாக தொழிலாளா்கள் விவகாரத்தில் சட்டப் பேரவையில் அமைச்சா் அறிவிப்பு ஒரு விதமாகவும், நடந்து கொள்வது ஒரு விதமாகவும் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.போக்குவரத்துத் துறையில் தனியாா் மயம் கொண்டுவரப்பட மாட்டாது
என அறிவித்திருக்கக்கூடிய நிலையில், தற்போது அவுட்சோா்சிங் முறையில் பணியாளா்களை நியமிக்க இருக்கும் முடிவு கண்டனத்துக்குரியது.
மேலும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள பண பலன்களை விடுவித்து ஊழியா்களுக்கான நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 3 ஆம் தேதிக்குப் பின்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, 15 நாள்களுக்குள் கோரிக்கைகள் குறித்து தொழிலாளா் துறையும், தமிழக அரசும் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசத் தீா்வு காண வேண்டும் என்றாா்.