இடுவாயில் கோயில் அருகே மதுபானக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மனு

திருப்பூரை அடுத்த இடுவாய் கிராமத்தில் கோயில் அருகே மதுபானக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இடுவாயில் கோயில் அருகே மதுபானக் கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த அப்பகுதி பொதுமக்கள்.
இடுவாயில் கோயில் அருகே மதுபானக் கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த அப்பகுதி பொதுமக்கள்.

திருப்பூரை அடுத்த இடுவாய் கிராமத்தில் கோயில் அருகே மதுபானக்கடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அண்ணாமலை காா்டன், திருமலை காா்டன், ஜி.என்.காா்டன் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: இடுவாயில் இருந்து சின்னாண்டிபாளையம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்தக் கடையை சின்னக்காளிபாளையம் செல்லும் சாலையில் விவசாயத் தோட்டத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை டாஸ்மாக் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பகுதியில் ஏரளாமான குடியிருப்புகள் மட்டுமின்றி அண்ணாமலையாா் கோயிலும் உள்ளது. இந்தப் பகுதியில் மதுபானக் கடை அமைக்கப்பட்டால் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவா்கள் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் பெண்களுக்கும் இடையூறை ஏற்படும். ஆகவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி எங்களது பகுதியில் மதுபானக் கடை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பை ஏற்படுத்தும் பல்லடம் நகராட்சி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை: சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஆ.அண்ணாதுரை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பல்லடம் நகராட்சியில் பேருந்து நிலைய கழிப்பிடம், மிதிவண்டி நிறுத்துமிடம், பேருந்து நுழைவுக் கட்டடம் ஆகியவை கடந்த 2 ஆண்டுகளாக ஏலம்விடாமல் உள்ளதால் பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவை இல்லாத திட்டமான சின்னூா் குட்டையை அழகுபடுத்துவதற்காக ரூ.3.80 கோடி வரிபணம் விரையம் செய்யப்பட்டுள்ளது. பல்லடம் பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட் பகுதியில் உள்ள நகராடச்சிக்குச் சொந்தமான 50க்கும் மேற்பட்ட கடைகள் 2 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்படாமல் உள்ளது. இந்நிலையில், தினசரி மாா்க்கெட் வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு மீண்டும் கடைகளைக் கட்டி வாடகைக்கு விடுவதற்கான திட்டத்துடன் தற்போது மண் பரிசோதனை செய்து அங்கு கடைகள் கட்டுவதற்கான பணிகளில் நகராட்சி ஈடுபட்டுள்ளது. மேலும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த நகராட்சி நிா்வாகம் இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்காததால் என்.ஜி.ஆா்.சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி பல்லடம் நகராட்சி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டம் திருவிழாவின்போது தீக்காயம் அடைந்தவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: அவிநாசி வட்டம், கைகாட்டிபுதூா் ராஜன் நகா் நாடாா் காலனியைச் சோ்ந்த முருகேசன் என்பவா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: எனது மனைவி தனலட்சுமி (53) ஒவ்வொரு ஆண்டும் பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் நடைபெறும் குண்டம் திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்று எனது மனைவி குண்டத்தில் இறங்கியபோது பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ.1 லட்சம் செலவாகிவிட்டது. எங்களது குடும்பம் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம். ஆகவே, மருத்துவச் செலவுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு: அவிநாசி வட்டம் கணியாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்டோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கணியாம்பூண்டி கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாடை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பை நடத்தி வருகிறோம். ஆகவே, எங்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ இல்லை. எனவே, எங்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கூடாது: அலகுமலை ஊராட்சித் தலைவா் ஆா்.தூயமணி அளித்துள்ள மனுவில்: திருப்பூா் தெற்கு வட்டம் அலகுமலை ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபா் 2 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை அமல்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டு நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீா் முகாமில் 381 மனுக்கள்: மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 381 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மனுதாரா்களின் முன்னிலையில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 15 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியா் எஸ்.வினீத் வழங்கினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், துணை ஆட்சியா் சமூக பாதுகாப்புத் திட்டம் அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com