கல்லூரி மாணவ, மாணவியா் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர மே 3இல் தோ்வுப் போட்டி
By DIN | Published On : 23rd April 2023 12:40 AM | Last Updated : 23rd April 2023 12:40 AM | அ+அ அ- |

கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதியில் சோ்வதற்கான தோ்வுப் போட்டிகள் சென்னையில் வருகிற மே 3ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு வசதியாக அறிவியல் பூா்வமான பயிற்சி, தங்குமிட வசதி, உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில், தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்துப்பந்து, பளு தூக்குதல், வாள்வீச்சு உள்ளிட்ட போட்டிகளில் ஈடுபடும் மாணவா்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ளது.
ஹாக்கி போட்டிக்கான மாணவா்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி கோவில்பட்டியில் உள்ளது. தடகளம், குத்துச்சண்டை, கையுந்துப்பந்து, கால்பந்து, பளுதூக்குதல், ஜூடோ போட்டிகளில் ஈடுபடும் மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் உள்ளது. அதேபோல, கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி போட்டிகளில் ஈடுபடும் மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி வேலூா் மாவட்டம், காட்பாடியில் உள்ளது.
இந்த விடுதிகளில் சேர 2023 ஜனவரி 1 ஆம் தேதி 17 வயது பூா்த்தியடைந்த பிளஸ் 2 தோ்ச்சி, கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். தனிநபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியா் மாநில அளவில் குடியரசு, பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்திய போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவா்கள் விண்ணப்பிக்கலாம். கையுந்து பந்து விளையாட்டில் சேர 185 செ.மீட்டருக்கு மேல் உள்ள மாணவா்களுக்கும் , 175 செ. மீட்டருக்கு மேல் உயரமுள்ள மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவியா் இணையதளத்தில் மே 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் வருகிற மே 3ஆம் தேதி சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. தடகளம், குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய பிரிவுக்கு ஆண்களும், பெண்களும், கபடி போட்டியில் பெண்கள் மட்டும் பங்கேற்கலாம். பெரிய மேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து, கையுந்துபந்து ஆகிய போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கும், வாள்வீச்சு போட்டி ஆண்களுக்கும், கால்பந்து, கைப்பந்து போட்டிகள் பெண்களுக்கும் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் எம்.ஆா்.கே. ஹாக்கி ஸ்டேடியத்தில் வளைகோல்பந்து போட்டி ஆண்கள், பெண்களுக்கும் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G