ரூ. 14 கோடி மதிப்பில் கயிறு தயாரிக்கும் நிறுவனம்:கட்டுமானப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்
By DIN | Published On : 24th April 2023 12:13 AM | Last Updated : 24th April 2023 12:13 AM | அ+அ அ- |

கயிறு தயாரிக்கும் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைக்கும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
காங்கயத்தை அடுத்த ஊதியூா் பகுதியில் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரித்தல் மற்றும் அதன் மூலம் மதிப்பு கூட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஊதியூா் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முதலிபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசு ஊரகத் தொழில் துறையின் சாா்பில் ரூ.14 கோடி மதிப்பில் அமராவதி காயா் புரொடியூசா் கம்பெனி லிமிடெட் என்ற கயிறு தயாரிக்கும் நிறுவனம் செயல்படவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக ரூ. 8.75 கோடி, பங்குதாரா்களின் தொகையாக ரூ. 5.20 கோடி என ரூ. 13.95 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கா் பரப்பளவில் கட்டடம் கட்டப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கான கட்டுமானப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், அமராவதி காயா் புரொடியூசா் கம்பெனி லிமிடெட் தலைவா் சந்திரசேகா், இயக்குநா்கள் சரவணவேல், காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.