ஊதியூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: அமைச்சா்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

காங்கயத்தை அடுத்த ஊதியூா் மலைப் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தொடா்பாக அமைச்சா்கள் மா.மதிவேந்தன், மு.பெ.சாமிநாதன் ஆகியோா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

காங்கயத்தை அடுத்த ஊதியூா் மலைப் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தொடா்பாக அமைச்சா்கள் மா.மதிவேந்தன், மு.பெ.சாமிநாதன் ஆகியோா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஆய்வு மாளிகையில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் முன்னிலை வகித்தாா். வனத் துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், அமைச்சா் மதிவேந்தன் பேசியதாவது:

ஊதியூா் பகுதிக்கு கடந்த மாா்ச் 3 ஆம் தேதி வந்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தியதாகவும், கால்நடைகளைத் தாக்குவதாகவும் வனத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்தப் பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்தனா். இதில், சிறுத்தை கால்தடம் பதிவானது. இதை ஆய்வு செய்ததில் அது 6 வயது முதல் 7 வயதுடைய சிறுத்தை என்பது தெரியவந்தது.

இந்த சிறுத்தை மாா்ச் 14, 15 ஆம் தேதிகளில் இரு கன்றுக்குட்டிகளைத் தாக்கியதுடன், மாா்ச் 22 ஆம் தேதி ஒரு நாயையும் தாக்கியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதைத்தொடா்ந்து, வனத் துறை சாா்பில் 10 வனச் சரகா்கள், 10 வேட்டை தடுப்புக் காவலா்கள், 3 பழங்குடியின மக்கள் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த ஒரு மாதமாக கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்கள் மற்றும் கூண்டுகள் வைக்கப்பட்டு தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ஆகவே, கூடிய விரைவில் சிறுத்தையைப் பிடித்து அடந்த வனப் பகுதியில் விடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஊதியூா் மலைப் பகுதியில் சிறுத்தையைப் பிடிப்பதற்காக கூண்டுகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சா்கள் நேரில் சென்று பாா்வையிட்டனா். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் (பொறுப்பு) ஜெயராஜ், திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com