அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 09th August 2023 12:48 AM | Last Updated : 09th August 2023 12:48 AM | அ+அ அ- |

பிரதான கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீா்.
உடுமலை: திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை நீா் குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றது.
இந்நிலையில் கரூா் வரையில் நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீா் தேவைகளுக்காகவும், பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிா்களைக் காப்பாற்றவும் உயிா் தண்ணீா் வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து அமராவதி அணையில் இருந்து ஜூன் 29ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு நிலைப் பயிா்களைக் காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நனைப்பிற்கும், குடிநீா்த் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:
பிரதான கால்வாய் வழியாக 440 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். மொத்தம் 380.16 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 25 ஆயிரத்து 250 ஏக்கா் புதிய ஆயக்கட்டு பாசனம் பயன்பெற உள்ளது என்றனா்.
அணை நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 63.19 அடி நீா் இருப்பு காணப்பட்டது. 4035 மில்லியன் கன அடி
கொள்ளளவு கொண்ட அணையில் 1927.08 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 61 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 50 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.